“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

யார் அந்த தியாகி என நாங்கள் கேட்ட கேள்வி வேறு நீங்கள் கூறிய பதில் வேறு என எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

Edappadi Palanisamy - MK Stalin

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’ எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொண்டனர். டாஸ்மார்க் துறையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றசாட்டு குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுகவினர் அவையில் தொடர் முழக்கம் எழுப்பினர்.

இதனை அடுத்து சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக கூறி அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் அப்பாவும் வெளியேற்றினார். மேலும், அனுமதியின்றி ‘யார் அந்த தியாகி?’ எனும் பதாகைகளை ஏந்தி வந்த 7 எம்எல்ஏக்களை இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து சட்டப்பேரவையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” யார் அந்த தியாகி? எனும் கேள்விக்கு பதில் அளித்தார். அதில், “அதிமுகவிலிருந்து தாங்கள் சிக்கியிருந்த வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள டெல்லி போய் யார் காலில் விழுந்தார்கள் என்று தெரியும். அதனால் நொந்து போய் நூடுல்ஸ் ஆகி இருக்கும் அதிமுக தொண்டர்கள்தான் தியாகிகள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக அன்றைக்கு உதவிய அம்மையாரை ஏமாற்றியவர்தான் தியாகியாக இருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனத்தை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதில் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதில், ” யார் அந்த தியாகி என்ற கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , சம்மந்தமே இல்லாத ஒரு பதிலை அளித்துள்ளார்.

சிட்டி பாபுவில் ஆரம்பித்து, தா.கிருட்டிணன், சாதிக் பாட்சா என பல்வேறு தியாகிகளை வரிசையாக கூற முடியும். உங்கள் குடும்பத்தில் செல்வாக்கு யாருக்கு அதிகம் என்ற போட்டியில் எரித்து கொல்லப்பட்டு, தியாகிகள் ஆக்கப்பட்ட அப்பாவி தினகரன் ஊழியர்களை நினைவிருக்கிறதா?

இவ்வளவு ஏன், கனவிலும் திமுகவில் தலைவராகவோ, முதல்வராகவோ உங்கள் குடும்பத்தை மீறி யாரும் எந்த பதவியிலும் வர முடியாது என தெரிந்தும், நீண்ட நாட்களாக தாங்கள் சுரண்டபடுகிறோம், கொத்தடிமைகளாக நடத்த படுகிறோம் என அறிந்தும், திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள்!

ஆனால், நாங்கள் கேட்ட கேள்வி அதுவல்ல. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சொல்லியிருக்கிறதே, அந்த ஊழலுக்கு பொறுப்பான அந்த தியாகி யார் என்று தான் கேட்கிறோம். அவருக்கு தியாகி பட்டம் கொடுத்த நீங்கள் தான் அந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்

யார்_அந்த_தியாகி? உங்கள் பதிலுக்கு மக்களுடன் இணைந்து காத்திருக்கிறோம்!” என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்