அதிமுகவுக்கு யார் தலைமை ? – ஓபிஎஸ்,ஈபிஎஸ் தனித்தனியே அவசர ஆலோசனை!
வரும் 23-ஆம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில்,சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதனையடுத்து,அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: “இந்த கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒன்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.மாவட்ட செயலாளர்கள்,நிர்வாகிகள் என அனைவரும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமைதான் தேவை என்றும் வலியுறுத்தினார்கள்.ஒன்றை தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும்.அதிமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் எதிர்பார்ப்பது கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்பதுதான்” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே,அதிமுகவுக்கு ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி இருக்க வேண்டும் என்று ஒருபக்கம் அவரது ஆதரவாளர்கள் குறை எழுப்பி வரும் நிலையில்,மறுபக்கம் ஓ.பன்னீர்செல்வம் தான் ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும் எனவும் அவரது ஆதரவாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.இதனால்,அதிமுகவின் ஒற்றை தலைமை தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சற்று முன்னர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னையில் உள்ள இல்லத்தில் 2வது நாளாக ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இந்த ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், தேனி மாவட்ட செயலாளர் சையது கான் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில்,ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது தொடர்பாக மறுபுறம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.அதன்படி,சென்னையில் உள்ள ஈபிஎஸ் வீட்டில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி,வேலுமணி,விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.