அதிமுக – பாஜக கூட்டணியின் தலைமை யார்? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக தொண்டர்கள் மனப்பூர்வமாக ஏற்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்று அதே மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இதனை அறிவித்தார்.
இதனையடுத்து அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். குறிப்பாக, இதனை திமுக கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், அடுத்ததாக தவெகவும் விமர்சனம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது விசிக தலைவர் திருமாவளவனும் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.
கோவை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பாஜக + அதிமுக கூட்டணி குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பாஜக அதிமுக-வை மிரட்டி உருட்டி பணிய வைத்து கூட்டணி வைத்துள்ளது. அமித்ஷா அறிவித்ததை நம்மால் பார்க்க முடிகிறது. யார் தலைமையில் கூட்டணி என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. கூட்டணியை அறிவித்தது பாஜக தான். ஆனால் இதில் அதிமுக ரோல் என்ன?
கூட்டணியை அதிமுக தொண்டர்கள் ஏற்க வழியில்லை. பாஜகவுடனான கூட்டணியை அதிமுக தொண்டர்கள் மனப்பூர்வமாக ஏற்கவில்லை எனவும் நான் நம்புகிறேன். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று சொல்லிருந்தார். ஆனால், இப்போது பாஜக அதிமுகவுடன் தான் கூட்டணி வைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமித்சாவை தனியாக சந்திக்கும் நிலைகள் உண்டாக்கியது. பாஜக உள்ள கூட்டணியில் சிறுபான்மையினர் வாக்குகள் என்பது இந்திய அளவில் கிடைக்காது.” எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.