#BREAKING: அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் யார்? தொடங்கியது ஆலோசனை!
அதிமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர் குறித்து அக்கட்சி தலைமை ஆலோசனை.
தமிழ்நாடு உட்பட நாட்டில் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர் குறித்து அக்கட்சி தலைமை ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலை தேர்வு செய்வதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.
அதிமுக சார்பில் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு தருமாறு ஓபிஎஸ், இபிஎஸ் பிடிவாதம் காட்டுவதால் வேட்பாளர்கள் அறிவிப்பதில் இழுபறி நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் 2 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை தன ஆதரவாளர்களுக்கே வழங்குமாறு இபிஎஸ் பிடிவாதம் பிடிப்பதாகவும், தான் சொல்லும் ஆதரவாளரை தான் அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி ஏற்பட்டதை அடுத்து முக்கிய நிர்வாகிகள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனையில் இறுதிக்கட்ட முடிவு எட்டப்பட்டு, வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனிடையே, மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக, பாமக ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.