சென்னை வண்டலூர் பூங்காவில் உயிரிழந்த வெள்ளைப்புலி..!
சென்னை வண்டலூர் பூங்காவில் நேற்று ஆண் வெள்ளைப்புலி உயிரிழந்துள்ளது.
சென்னையில் உள்ள வண்டலூர் பூங்காவில் கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மே மாதத்தில் வண்டலூர் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், அதில் 2 சிங்கங்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் இருக்கும் ஜோடி வெள்ளைப்புலிகளில் ஆண் வெள்ளைப்புலி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் படி, டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் இருந்து சென்னை வண்டலூர் பூங்காவிற்கு பீஷ்மர், அணு என்ற ஜோடி வெள்ளைப்புலிகள் கொண்டுவரப்பட்டன.
இந்த ஜோடி புலிகள் ஐந்திற்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றுள்ளது. மேலும், 17 வயதான ஆண் வெள்ளைப்புலி பீஷ்மர் உயிரிழந்துள்ளது.
இந்த வெள்ளைப்புலியின் இறப்பு வயது முதிர்வால் ஏற்பட்டதா? இல்லை கொரோனாவால் ஏற்பட்டதா? என்று பிரேத பரிசோதனை ஆய்வுகளில் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.