24 மணி நேரத்தில் வெள்ளை அறிக்கை – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட ரூ.10.76 லட்சம் கோடி நிதிக்கான வெள்ளை அறிக்கை 24 மணி நேரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை என்ற முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். கோவை பேரூர் பகுதியில் நடைபெறும் நொய்யல் திருவிழாவின் 5ஆம் நாள் நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு நிதி வந்துள்ளது என்று நான் ஒரு புள்ளி விவரத்தை என் மண் என் மக்கள் பாத யாத்திரைக்கு முன்பு கொடுத்து இருந்தேன்.
ஆனால், தமிழகத்திற்கு குறைவான நிதி தான் அளிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழகத்திற்கு குறைவான நிதி ன்று குற்றசாட்டு வைக்கும் முதலமைச்சர், பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி கொடுத்தது என்று அறிவிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகள் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் உள்ளிட்ட எதை எடுத்து கொண்டாலும், எந்த மாநிலத்திற்கும் கிடைக்காதது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. எனவே, ரூ.10.76 லட்சம் கோடிக்கான புள்ளி விவரத்தை வெள்ளை அறிக்கையாக இன்னும் 24 மணி நேரத்தில் பாஜக கட்சி வெளியிடும். முதலமைச்சர் ஸ்டாலின் அதிகமாக பொய் பேசி வருகிறார்.
பேசுவதற்கு முன்பு அதை ஒரு முறை கிராஸ் செக் செய்ய வேண்டும் அல்லது உடன் இருக்கக்கூடிய அதிகாரிகள் அந்த பேச்சை தடுக்க வேண்டும். அரசியல் பேசுவதற்காக எதை எதையோ பேசி முதல்வர் சிக்கலில் சிக்க போகிறார். அதுவும், திமுக வந்த பிறகு பொய் அதிகமாக பேச துவங்கி விட்டார்கள். எனவே, ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல. நாங்கள் வெளியிடும் வெள்ளை அறிக்கை அதிகாரிகளிடமும் கொடுத்து அந்த அறிக்கை பொய் என்று சொல்லட்டும் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.