தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? நாம் தமிழரா? காங்கிரஸா? – கே.எஸ் அழகிரி விளக்கம்

Default Image

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைக்கும் ஜீவனுள்ள இயக்கமாகக் காங்கிரஸ் கட்சி விளங்குகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது – கேஎஸ் அழகிரி

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றி ஆட்சியை இழந்தது. திமுக, அதிமுகவை அடுத்து வெற்றி கூட்டணியில் இடம்பிடித்திருந்த காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களை வெற்றி பெற்றது.

இதையடுத்து தமிழகத்தின் மூன்றாவது கட்சி எது? என்று பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், 30 லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி தான் தமிழகத்தின் மூன்றாவது கட்சி என்று அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் 72% வெற்றி பெற்று, ஒரு தொகுதியில் 80 ஆயிரம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் 3வது பெரிய கட்சியா? ஒரு தொகுதியில் சராசரியாக 13 ஆயிரம் வாக்குகள் மட்டும் பெற்ற நாம் தமிழர் கட்சி 3வது பெரிய கட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் சராசரியாக வாங்கிய வாக்குகளின் அடிப்படையிலும் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. தகவல்களின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி தான் மூன்றாவது பெரிய கட்சி என்று ஒரு சில ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது என விமர்சித்துள்ளார்.

மேலும், தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியை பற்றி கவலைப்படாமல் இருப்பதற்கும் பின்னாலே இருக்கிற மர்ம ரகசியத்தை இளைஞர்கள் விரைவில் புரிந்துகொண்டு தெளிவு பெறுவார்கள் என்று விளக்கமளித்துள்ளார்.

மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வந்த மக்கள் விரோத பாஜக., அதிமுக ஆட்சிகளுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் கடந்த மக்களவை தேர்தலில் 39 இடங்களில் 38 இல் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு 60 லட்சம் வாக்குகள் அதிகமாக அளித்து தமிழக மக்கள் அமோக ஆதரவை அளித்து வெற்றி பெறச் செய்தனர்.

அதுபோன்று நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றி பெறச் செய்து தமிழகத்தில் நடைபெற்று வந்த பாஜக. ஆதரவு பெற்ற அராஜக ஊழல் ஆட்சி அகற்றப்பட்டு திமுக தலைமையில் நல்லாட்சி அமைந்துள்ளது. கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வந்த தமிழக மக்களுக்கு விடியல் ஏற்படுகிற வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று நல்லாட்சியை அளிக்க இருக்கிறார்.

இத்தகைய முடிவை அளித்த தமிழக மக்களை இந்திய நாடே பாராட்டி வருகிறது.  எனவே, நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும், மக்கள் நீதி மய்யமாக இருந்தாலும் ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் கூட வெற்றி பெற முடியவில்லை என்றால், தாங்கள் செல்கிற அரசியல் பாதை குறித்து மறு சிந்தனை செய்ய வேண்டுமே தவிர, புதிய வியாக்கியானங்களை வழங்கி தங்களை மூன்றாவது பெரிய கட்சி என்று அழைப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைக்கும் ஜீவனுள்ள இயக்கமாகக் காங்கிரஸ் கட்சி விளங்குகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்