ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, எல்லாம் பக்கமும் மதுபானம் ஆறாக ஓடுகிறது – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
மதுவால் வருமானம் அதிகரித்து வருவதால், மாநிலமே மதுவில் மூழ்கியுள்ளது என்று அரசு கவலை கொள்வதில்லை – உயர்நீதிமன்றம் மதுரை கிளை
மதுரை மேலூர் சாலையில் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி, தாஹா முகமது என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே வைப்பதற்கு மதுபானக் கடைகள் ஒன்றும் புத்தக கடையோ, மளிகை கடையோ இல்லை என குற்றசாட்டியுள்ளனர்.
மதுவிற்பனையால் மாநிலமே மதுவில் மூழ்கியுள்ளது என்று அரசு கவலை கொள்வதில்லை. தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம் ஆறாக ஓடுவதாக நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும்படி நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள கடை பிப்ரவரி 28ம் தேதிக்கு பிறகு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவித்ததை தொடர்ந்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.