எங்கள் எய்ம்ஸ் எங்கே? செங்கல் நட்டு 5 ஆண்டுகள் நிறைவு – சு.வெங்கடேசன் எம்பி
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எய்ம்ஸ் மருத்துவமனை வருவதால் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழக பொதுமக்கள் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்வது முதல் நிதி ஒதுக்குவது வரை, பல ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கிடப்பில் போடப்பட்டது.
இருப்பினும், கடந்த 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு மீண்டும் அறிவித்தது. அதன்படி, கடந்த 2019ம் ஆண்டு மதுரை தொப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இந்த மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை.
ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை 2026ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளுக்கான திட்ட மேலாண்மை இயக்குநர்களும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனை கட்டுமானத்திற்கு இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது எனவும் கூறப்பட்டது. இருந்தாலும், எப்போது தொடங்கப்படும் என்ற தகவல்களை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.
தமிழ்நாட்டில் எழும் சர்ச்சைகளுக்கு ஆளுநரே காரணம்… பா.சிதம்பரம்
இதுகுறித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. அந்தவகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்லில் எய்ம்ஸ் என எழுதி இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என காண்பித்து கிண்டல் செய்தார்.
இந்த நிலையில், எங்கள் எய்ம்ஸ் எங்கே என்று மத்திய பாஜக அரசுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில், மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது.
இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
எங்கள் எய்ம்ஸ் எங்கே?#AIIMSmadurai#fifthyearFoundationofAIIMS https://t.co/vQtI1aewwb pic.twitter.com/gsQPbTUr57
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 27, 2024