தமிழகம் கேட்ட தடுப்பூசிகள் எப்போது தரப்படும்?- உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழக அரசு கேட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு எப்போது தரும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கான தடுப்பூசி, உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எப்போதும் வரும் என தெரியாது என்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்கனவே கையிருப்பில் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் இருந்து 1.5 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்திருந்தாலும், எப்போது வந்து சேரும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால், 18 வயதானவர்களுக்கு நாளை தடுப்பூசி போடுவது சந்தேகம் என்றும் பற்றாக்குறையால் திட்டமிட்டபடி 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இந்த நிலையில், தமிழக அரசு கேட்டுள்ள தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை மத்திய அரசு எப்போது தரும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் கேட்ட கொரோனா தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை எத்தனை நாட்களில் விநியோகிக்க முடியும் என மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மே 5ம் தேதிக்கு தள்ளிவைத்து உயர்நீதிமன்றம்.