புயல் எப்போதாங்க கரையைக் கடக்கும்? …பிரதீப் ஜான் கொடுத்த லேட்டஸ்ட் தகவல்!
தமிழகம் நோக்கி நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயலானது இன்று அல்லது நாளை கரையைக் கடக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவெடுத்து இருக்கும் ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து மேற்கு வடமேற்கு திசையில் 140கி.மீ தொலைவில் நிலை கொண்டு வருகிறது. மேலும், இது 12கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று பிற்பகல் அல்லது மாலை பொழுதில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, இது குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்றை தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், “வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும்.
புயல் கரையை கடக்கும் போது, இன்று நள்ளிரவில் பலத்த மழை பெய்யக் கூடும். மேலும், புயல் கரையை நெருங்க எவ்வளவு தாமதமாகிறதோ அது வரையில் சென்னை, உட்பட அண்டை மாவட்டங்களில் கனமழை அதிகரிக்கக் கூடும்.
இந்த புயலானது மரக்காணம் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை காலை 8.30 மணி வரை கனமழை பெய்யும்”, என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.