மதுரை எய்ம்ஸ் விவகாரம்.. 5 வருடமாக என்ன செய்தீர்கள்? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!
மதுரை : எய்ம்ஸ் எப்போது கட்டிமுடிக்கப்டும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதாக மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அறிவித்தது. பின்னர், 2018ஆம் ஆண்டு மதுரை தோப்பூர் பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதனை அடுத்து , தற்போது (2024) வரையில் மதுரை எய்ம்ஸ் கட்டிமுடிக்கப்படவில்லை.
இதுகுறித்து, மாநில அரசு (திமுக) பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. திமுக எம்பிக்கள் மக்களவையில் அந்த துறை அமைச்சர்களிடத்தில் கேள்வி கேட்டுள்ளனர். “முதலில் போடப்பட்ட பட்ஜெட், கொரோனாவுக்கு பின்னர் தற்போதைய நிதிநிலைப்படி உயர்ந்துவிட்டது அதனால் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பட்ஜெட் அதிகமாகிவிட்டது, ஜப்பான் நிறுவனம் மதுரை கட்டுமானத்திற்கு நிதியுதவி செய்கிறது.” என பல்வேறு விளக்கங்கள் மட்டும் மத்திய அரசு சார்பில் அவ்வப்போது வெளியாகி வந்தன.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் உள்ளதை குறிப்பிட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் அம்மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர் எனும் நபர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், மதுரை எய்ம்ஸ் கட்டிமுடிக்கப்பட்டால் மருத்துவ ஊழியர்கள் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கருத்தில்கொண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டிமுடிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறுகையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தான் பணிகள் தாமதமானது. 2026ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் கட்டிமுடிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனை அடுத்து நீதிபதி அமர்வு கூறுகையில், மதுரை எய்ம்ஸ் திட்டம் அறிவித்து 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டிமுடிக்கப்படவில்லை. இதுநாள் வரையில் என்ன செய்தீர்கள்? இந்த கட்டுமான பணிகள் எப்போது முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகக் கூறி உத்தரவிட்டார்.