நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? – இன்று பிற்பகலில் முடிவு!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவக்குழு தகவல்.
கடந்த 28-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்திற்கு திடிரென தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டது.
இதையடுத்து, ரஜினிக்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து ரஜினிகாந்தின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். மூன்றாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
ரஜினிக்கு எடுக்கப்பட்ட அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளிலும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ரஜினி நன்றாக பேசுவதோடு, உணவு எடுத்துக் கொள்கிறார் மற்றும் அன்றாட பழக்கங்களை செய்கிறார் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது என்பது குறித்து இன்று பிற்பகல் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, ரஜினிகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதன்பின், நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருவதாகவும், ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.