ரயில் போர்வைகளில் ‘துர்நாற்றம்’ வீசினால் மட்டுமே துவைப்போம்., ஊழியர்கள் அதிர்ச்சி தகவல்.!
ரயில் ஏசி பெட்டிகளில் உள்ள போர்வைகளில் துர்நாற்றம் வீசினாலோ , கறை ஏற்பட்டாலோ தான் பெரும்பாலும் துவைப்போம் என ரயில்வே ஊழியர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : இந்தியன் ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு கம்பளி போர்வை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உறையுடன் தலையணை , விரிப்பு ஆகியவை வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் போர்வை மற்ற துணி உபகாரணங்களை முறையாக ரயில்வே நிர்வாகம் சுத்தம் செய்து தர வேண்டும். அதற்கும் சேர்த்து தான் டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
அப்படி, வசூல் செய்யப்படும் தொகை முறையாக செலவு செய்யப்படுகிறதா.? முறையாக தலையணை உறை, காட்டன் போர்வைகள், கம்பளி போர்வைகள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தளம் தகவல் அறியும் சட்டம் (RTI) மூலம் தகவல்களை சேகரித்து வெளியிட்டுள்ளது.
RTI தகவலின்படி, தலையணை உறை மற்றும் காட்டன் போர்வைகள் ஆகியவை ஒவ்வொரு பயணத்தின் போதும் துவைக்கப்படும் என்றும், கம்பளிப் போர்வை பொதுவாக மாதம் ஒருமுறை துவைக்கப்படும் என்றும், ஒருவேளை தேவை ஏற்பட்டால் மாதம் 2 முறை துவைக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரயில்வே அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பராமரிப்பு மேலாண்மை பிரிவு அதிகாரி ரிஷு குப்தா தாக்கல் செய்தார்.
இதுகுறித்து ரயில்வே தூய்மை பணியாளர்கள் சிலரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் கேள்வி எழுப்பியுள்ளது. அவர்கள் கூறுகையில், பொதுவாக தலையணை உறை , காட்டன் விரிப்புகளை மட்டும் மடித்து எடுத்து துவைக்க கொண்டு செல்வோம் என்றும், கம்பளி போர்வைகளை மடித்து பெட்டிகளிலேயே வைத்து விடுவோம். அது துர்நாற்றம் வீசினாலோ, ஈராமாக இருந்தாலோ, கறை ஏற்பட்டாலோ தான் அதனை துவைக்க எடுத்து செல்வோம் என்றும் கூறினர் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கம்பளி போர்வை மாதம் ஒருமுறை அல்லது சில சமயம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கூட துவைக்கப்டும் என சிலர் தெரிவித்துள்ளனர். ஒருவேளை பயணிகள், போர்வைகள் குறித்து புகார் அளித்தால் உடனடியாக போர்வைகள் மாற்றி தரப்படும் எனவும் தூய்மை பணி ஊழியர்கள் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவல்களை தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியாளர்களிடம் தான் சேகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.