பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தற்போது 4ம் கட்ட ஊரடங்கில் பலவேறு தளர்வுகள் அளிக்கப்பட்டும், பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே உள்ள தடை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் சமீப காலமாக ஆன்லைன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு பிரத்தியேக தொலைக்காட்சி ஒன்றை தொடங்கி, அதன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, 21ஆம் தேதி நேற்று முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை என்று பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முழுமையான கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து பேசிய அவர், 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்த நிலையில் செப்டம்பர் இறுதி வரை சேர்க்கை நடக்கும். 15 இடங்களில் தொடக்க பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளும் தொடங்கப்படும் என்று ஈரோடு சென்ற அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.