1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று ஆலோசனை கூட்டம்!
1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து பாடம் நடத்தாவிட்டால் உளவியல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், ஐ.சி.எம்.ஆர் மற்றும் உலக சுகாதார அமைப்பும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்குவதற்கான வழிகாட்டுதலையும் அறிவித்துள்ளது. ஏற்கனவே, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக பரிந்துரை செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
தற்பொழுதும் இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவத் துறை, பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.