முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் ‘மோடி மோடி’ முழக்கம்.! அமைதிப்படுத்திய பிரதமர் மோடி.!
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று இரு அரசு நிகழ்வுகளில் ஒரே மேடையில் கலந்துகொண்டனர். காலையில், திருச்சி – புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38வது பட்டமளிப்பு விழாவில் இருவரும் கலந்துகொண்டனர். உடன் ஆளுநர் ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதற்கடுத்து, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய முனையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது அரசியல் அல்ல… எங்கள் கோரிக்கை.! வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.!
விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய முனையம் திறந்து வைக்கப்பட்ட பின்னர், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பேசியதற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச துவங்கினார். அந்த சமயம் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர் “மோடி மோடி” என கோஷமிட்டனர்.
இதனால் முதல்வர் பேசுவதற்கு சற்று இடைஞ்சலாக இருந்தது. அப்போது பிரதமர் மோடி கையசைத்தும் அவர்கள் கேட்கவில்லை. மோடி மோடி என்ற கோஷமிட்டு கொண்டிருக்கும் போதே முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தார். அதன் பிறகு கூட்டத்தினர் அமைதியாகினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசுகையில், சென்னை – பினாங், சென்னை – டோக்கியோ இடையே விமான சேவையை தொடங்க வேண்டும். சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கை விரைந்து வழங்க வேண்டும். சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறையை மேம்படுத்துவதோடு சுங்கவரியை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும் என அந்த கூட்டத்தில் பிரதமரிடம் கோரிக்கைகளை முன்வைத்தார்.