யார் என்ன செய்தாலும் பிரதமராகிய நான் ஏழைகளின் பக்கம்தான் இருப்பேன் -பிரதமர் நரேந்திர மோடி
யார் என்ன செய்தாலும் பிரதமராகிய நான் ஏழைகளின் பக்கம்தான் இருப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரை பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய நெடுஞ்சாலை, நீர்வழிச்சாலை, வானூர்தி சேவை, தகவல் தொடர்பு மேம்பாட்டிற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.வானூர்தி மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தியின் மையமாக தமிழகம் திகழ நடவடிக்கை எடுக்கப்படும்.நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு, பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோரை பாதிக்காது.10% இடஒதுக்கீடு விவகாரத்தில் சில தமிழக கட்சிகள் எதிர்மறையாக பேசி வருகின்றன. தவறாக சித்தரிக்க முயல்கின்றன.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் கோரிக்கை பற்றி அதற்கான ஆணையத்தில் பேசியுள்ளேன். ஏழை மக்களுக்கான திட்டத்தை எதிர்ப்பது நன்மை பயக்காது.
கப்பல் போக்குவரத்தில் முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்தப்படுகிறது.தூத்துக்குடி துறைமுகத்தின் முன்னேற்றத்திற்கு பல்வேறு பணிகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆரோக்கியத்தை மேம்படுத்த தூய்மை இந்தியா திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டுமே 47லட்சம் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காக உள்கட்டமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.மதுரை மக்களின் கோரிக்கையான அதிவேக ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்.யார் என்ன செய்தாலும் பிரதமராகிய நான் ஏழைகளின் பக்கம்தான் இருப்பேன்.
நாட்டில் ஊழல் மற்றும் மோசடி புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தபடுவர். ஊழல் புரிந்தவர்கள் தான் நாட்டின் காவலனாக உள்ளவரை நீக்க ஒன்று சேர்ந்துள்ளனர்.ஏழைகளுக்கு எதிரான எந்த ஒரு அரசியல் நடவடிக்கையும், யாருக்கும் எந்த பயனையும் தராது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.