முதலமைச்சர் பழனிசாமி எதைச் செய்தாலும் அதில் அவசர கோலம், அரைவேக்காட்டுத்தனம் – மு.க .ஸ்டாலின்
பழனிசாமி எதைச் செய்தாலும் அதில் அவசர கோலம்; அரைவேக்காட்டுத்தனம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா, அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்தி தேர்ச்சியை அறிவிக்க வேண்டும் என்பது தான் ஏஐசிடிஇ-ன் விதி என்றும் கூறியிருந்தார் .மேலும் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தமிழக அரசிற்கு அர்யர் தேர்வு தொடர்பாக எந்த கடிதமும் ஏஐசிடிஇ மற்றும் யுஜிசி-யிடம் இருந்து வரவில்லை. அவ்வாறு ஒரு கடிதம் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.
பின் அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ ஆகஸ்ட் 30-ஆம் தேதி அனுப்பிய கடிதம் வெளியாகியது.அந்த கடிதத்தில், அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில் நிறுவனமும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது.மேலும் உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், அரியர்ஸ் தேர்வு இல்லாமல் தேர்ச்சி என்ற அறிவிப்பை ஏற்க இயலாது என அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில், அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறது. முதலமைச்சர் திரு. பழனிசாமி எதைச் செய்தாலும் அதில் அவசர கோலம்; அரைவேக்காட்டுத்தனம்.
அரியர்ஸ் தேர்வு இல்லாமல் தேர்ச்சி என்பதை @AICTE_INDIA எதிர்த்திருக்கிறது. @CMOTamilNadu எதைச் செய்தாலும் அவசர கோலம்; அரைவேக்காட்டுத்தனம்!
கல்வியாளர்களின் கருத்தறியாமல் அரசு நடத்திய கபட நாடகத்தால் மாணவர்களுக்கும் மனஉளைச்சல்!
இனியும் மாணவர்கள் எதிர்காலத்துடன் விளையாடாதீர்! pic.twitter.com/MkgcY40xDF
— M.K.Stalin (@mkstalin) September 8, 2020