திமுக வெற்றி பெற்றால் அதிமுக என்ன செய்வார்கள், ரோட்ல கூட நிற்க முடியாது – டிடிவி தினகரன்
வரும் தேர்தலில் அமமுக இடம்பெறும் அணியே முதல் அணியாக இருக்கும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தீய சக்தியான திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது என்பதற்காக நாங்கள் போராடி வருகிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை, தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக எங்கே இருக்கும், என்ன செய்வார்கள். நாங்கல்லாம் ரோட்ல கூட இருப்போம். ஆனால், அவர்கள் ரோட்ல கூட நிற்க முடியாது. எல்லாரும் எங்கே கிடைப்பிங்கனு தெரியும் என்று கூறியுள்ளார்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா போட்டியிடுவது குறித்து சட்டரீதியாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் வெற்றி கிடைத்தால் கண்டிப்பாக அவர் போட்டியிடுவார் எனவும் தெரிவித்துள்ளார். சசிகலா போட்டியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் இருக்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மாவின் தொண்டர்கள் இருப்பது தான் தமிழகத்தில் முதல் அணியாக இருக்கும். வரும் தேர்தலில் அமமுக இடம்பெறும் அணியே முதல் அணி என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அம்மாவின் உண்மையான ஆட்சி வரவேண்டும் என்றால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். அதன் வெளிப்பாடுதான் 4 ஆண்டு காலம் பழிச்சொல்லுக்கு பின்னர் வந்த சசிகலா அவர்களுக்கு அளித்தே வரவேற்பே காரணம். தற்போது மருத்துவர்கள் சசிகலாவை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். ஓய்வு முடிந்த பிறகு சசிகலா வருவார். நாங்கள் நிச்சியம் அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்போம் என கூறியுள்ளார்.