இபிஎஸ் உடன் பேசியது என்ன? – தமிமுன் அன்சாரி பதில்!
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சந்திப்பு நடந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்திருந்த நிலையில், தமிமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், இபிஎஸ்-ஐ தமிமுன் அன்சாரி சந்தித்து பேசியிருப்பது, கூட்டணி தொடர்பாக இருக்கும் என கூறப்படுகிறது .
இந்த சந்திப்பின்போது, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க குரல் கொடுக்குமாறு வலியுறுத்தினேன்.
இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறோம். அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளோம். இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பாஜக கூட்டணியை அதிமுக முறித்தது துணிச்சலான முடிவு என இபிஎஸ்-யிடம் தெரிவித்தேன்.
பாஜகவில் இருந்து அதிமுக வெளியேறியது ஒரு நல்ல செய்தி, இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளேன். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பரில் முடிவு செய்யப்படும். சிறைவாசிகள் விடுதலை தொடர்பாகவே இபிஎஸ் உடன் சந்திப்பு தவிர கூட்டணி தொடர்பாக அல்ல என விளக்கமளித்தார். எனவே, இந்த சந்திப்பு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வரை செல்லுமா? என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.