பத்திரப்பதிவுத்துறையில் ஊழலை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது-உயர்நீதிமன்றம் கேள்வி?
பத்திரப்பதிவுத்துறையில் ஊழலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாட்டு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கோபாலகிருஷ்ணன் சார் பதிவாளராக பணியாற்றினார். அப்போது சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு 70 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்துள்ளதால் அதை பறிமுதல் செய்து, சார்பதிவாளராக இருந்த கோபாலகிருஷ்ணனை தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். தற்போது இவர் மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனால் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான கோபாலகிருஷ்ணன் உத்தரவை ரத்து செய்யுமாறு கருப்பு எழுத்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்ட நீதிபதிகள் சஞ்சிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் ஊழல் குற்றத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுவதாக கூறியுள்ளனர். அதனால் பத்திர பதிவுத்துறையில் ஊழலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த விசாரணை தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.