வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தத்தை செய்துவிட்டார்? சீமான் ஆவேசம்!
பெரியாரின் எழுத்துக்களை அரசுடைமையாக்கி விட்டு என்னிடம் ஆதாரங்களை கேளுங்கள் என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழ் மொழியை குப்பை, காட்டுமிராண்டி மொழி , சனியன் எனக் கூறியவர் பெரியார். தமிழ் தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது? மூன்றாயிரம் ஆண்டுகளாக தமிழ்த்தாய் என்ன செய்தது என்று கேட்டவர் பெரியார்.
உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ மகளோ அக்காவோ தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு என பெரியார் கூறியதாகவும்” சீமான் தெரிவித்தது தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெரியார் குறித்து அவதூறாக பேசிய நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, அவரது வீட்டை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து, சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினரை காவல்துறை அதிரடியாக கைதும் செய்தது. இதனையடுத்து, புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் சற்று ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியார் பேசினார் என்றால் பரவாயில்லை. பெரியார்தான் எல்லாம் செய்தார் என்று சொன்னால் அது எப்படி? வஉசி, இரட்டைமலை சீனிவாசன், மறைமலை அடிகள் எல்லாம் இல்லையா?
அம்பேத்கர், பெரியாரை ஒன்றாக வைப்பது, ஒப்பிடுவது எப்படி சரியாகும்? இருவரையும் ஒப்பிடும் அளவுக்கு எதாவது முரண் இருக்கிறதா? இரண்டு சிலைகளையும் ஒரே இடத்தில் வைத்தால் அது ஒன்றாகிவிடுமா? இரண்டு பேருடைய சிந்தனையும் ஒன்றா? உலகத்தில் ஆகச்சிறந்த கல்வியாளர் என்றால் அம்பேத்கர் தான். பெரியார் யார்? தனக்கு தோணுவதை பேசிகொன்டு சென்றவர் அவர். எனவே, அம்பேத்கரையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவது என்பது முட்டாள்தனம்.
தமிழை காட்டு மிராண்டி மொழி எனக்கூறிய பெரியார் எந்த மொழியில் எழுதி பேசினார்?இஸ்லாமியர்களை துலுக்கர்கள் என்றும் வேறு நாட்டவர் என்றும் கூறியவர் பெரியார் தமிழ்த்தாய் உங்களை படிக்க வைத்தாளா? என பெரியார் பேசவில்லையா? தமிழர்களுக்கு பெரியார் தான் அரண் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?” எனவும் கேள்விகளை எழுப்பினார்.
அதனைத்தொடர்ந்து ” நான் என்னுடைய ஆரம்ப காலத்தில் பெரியாரை ஆதரித்தபோது தெளிவு இல்லாமல் இருந்தேன். தற்போது தெளிவாகிவிட்டேன். நான் இப்போது தான் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அப்படி படித்து வரும்போது தான் எனக்கு ஒரு தெளிவு வருகிறது. என்னுடைய இனத்தின் இறப்பில் தான் இவன் எல்லாம் திருட்டு பையன் என்று தெரிய வருகிறது. 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் தான் திராவிடன் திருடன் என்று எனக்கு தெரியவந்தது.
என் தலைவன் பிரபாகரனை சந்திக்கும் முன்பு வரை நானும் திராவிடம் என்ற திருட்டு கூட்டத்தில் தான் இருந்தேன். அவரை சந்தித்த பிறகு தான் தமிழன் என்றால் என்ன தமிழ் தேசம் என்றால் என்ன? தமிழக அரசியல் என்றால் என்ன என்று தெரிந்துகொண்டேன்” எனவும் சீமான் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, சீமான் வீட்டை முற்றுகையிட்டு தபெதிகவினர் நடத்திய போராட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கும் பதில் கூறிய சீமான் ” என்னுடைய மனைவியிடம் நான் சொல்லிக்கொண்டு தான் வந்தேன்..அண்ணன் வந்தார் என்றால் அவருக்கு தேநீர் கொடு என்று அதற்கு என்னுடைய மனைவி மோர் கொடுக்கோம் என்றார். இதனை மாதிரி பல விஷயங்களை பார்த்துவிட்டேன். லட்ச கணக்கில் துப்பாக்கிகளை கடந்து தான் என்னுடைய தலைவனை பார்த்து வந்தேன்.
எனவே, போராட்டம் செய்பவர்களுக்கு எங்களுடைய கோரிக்கை என்பது ஒன்றே ஒன்று தான். எரியும் செருப்பு 7, 8 அளவுகளில் இருக்கவேண்டும். புது செருப்பாக எறியுங்கள். முட்டை நாட்டுக்கோழி முட்டையாக வீசுங்கள்” எனவும் சீமான் கிண்டலாக பேசினார்.