“பெரியார் என்ன புரட்சி செய்தார்?” – பெரியாா் குறித்து சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
பெரியார் என்ன சமூகநீதி செய்தார்? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மீண்டும் பெரியாா் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு திராவிட கழகத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சீமான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக, மாநிலம் முழுவதும் அவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 20ஆம் தேதி அறிக்கை சமர்பிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, “இன்று யார் யாரோ பெரியார் குறித்து பேசி உள்ளனர். பெரியார் குறித்து பேசியவர்கள் குறித்து பேசி அவர்களுக்கு நான் அடையாளம் காட்ட விரும்பவில்லை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியிருந்தார்.
இந்த நிலையில், இன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் பெரியார் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து பேசிய அவர், “பெரியார் என்ன புரட்சி செய்தார் எனவும், ராஜாஜியுடனும், ஜனசங்கத்துடனும் கூட்டணி வைத்தது ஆர்யம் இல்லையா என்றும் கேள்வியெழுப்பினார்.
“திராவிடத்தை ஆதரித்த பெரியார் ஆரிய தலைமையுடன் நட்புடன் இருந்தார். வள்ளலார், அய்ய வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்? பெரியார் குறித்து பேச பொது விவாதத்திற்கு நான் இரு கரம் நீட்டி தயாராக உள்ளேன். பெரியார் என்ன சமூகநீதி செய்தார்? பெண்ணுரிமை பற்றி பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி.
திராவிட எதிர்ப்பு என்று பேசினால் ஆரியம் உள்ளே வந்துவிடும் எனப் பேசுகிறார்கள். ஆரியத்தோடு கைகோர்த்துக் கொண்டு எதிர்ப்பதாக பெரியாரும் அண்ணாவும் கூறினர். ஆனால், திராவிடத்தை ஆதரித்த பெரியார் ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார். பெரியாரின் தத்துவங்களை மட்டுமே பேசி வாக்கு சேகரிக்க எந்த தலைவராவது தயாராக உள்ளனரா?
பெரியார் எந்த சமுதாயத்திற்கு நீதியை பெற்று கொடுத்தார். பெரியார் சமூக நீதியை நிலைநாட்டினார் என்றால், பாமக ஏன் இன்னும் போராடுகிறது? அம்பேத்கருடன் பெரியாரை ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.