5 மாநில தேர்தலில் எத்தனை சதவீதம் பெண்கள் போட்டியிடுகிறார்கள்? காயத்ரி ரகுராம் கேள்வி!
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல்களை நடத்தி முடித்துவிட்டது.
இதையடுத்து, ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதியும், தெலங்கானாவில் வரும் 30-ம் தேதியும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிச.3-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த 5 மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தீவிரமாக தேர்தல் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் வேட்பாளர்களை அறிவித்து, இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். மறுபக்கம் தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது
இதனிடையே, புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றபோது முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அதாவது, மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இம்மசோதா நிறைவேறியது. அதன்படி, வாக்கெடுப்பில் 456 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
நட்பு ரீதியில் உள்ளோம்.. த.மா.கா. யாருடனும் தற்போது கூட்டணியில் இல்லை..ஜி.கே.வாசன்!
சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி வகுக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதுக்கு ஆதரவு அளித்தாலும், மைதிய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். இது தேர்தலுக்கான கண்துடைப்பு என்றும் இம்மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். அதுவும், அடுத்தாண்டு நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால், மக்களத்தொகை கணக்கெடுப்பு,தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என்பதால், 2029ம் ஆண்டு தேர்தலின்போதுதான் இது அமலாக வாய்ப்புள்ளது. இதனால், பாஜகவை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழல் 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து நடிகையும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 5 மாநில தேர்தலில் எத்தனை சதவீதம் பெண்கள் போட்டியிடுகிறார்கள்? எத்தனை பெண்கள் வெற்றி பெறுவார்கள்? இன்று வரை பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. தொகுதிகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கும். பெண்களுக்கான இடஒதுக்கீடு இன்னும் அமல்படுத்தப்படாதது பெண்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்றுள்ளார். பல்வேறு சர்ச்சையால் பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், சமீப காலமாக பாஜகவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.