ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலவரம்.. பாஜகவின் முடிவை எதிர்பார்க்கிறதா அதிமுக.?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக என இரு பெரும் கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்காமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளை பிரதான கட்சிகள் தீவிரமாக ஆரம்பித்து உள்ளன. ஏற்கனவே அந்த தொகுதியில் எம்எல்ஏ பதவியில் இருந்து மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை இவிகேஎஸ்.இளங்கோவன் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
அதிமுக முடிவு : திமுக கூட்டணியினர் அங்கு வேட்பாளரை அறிவித்து வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் , எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக இன்னும் அதற்கான நிலைப்பாட்டை உறுதியாக எடுக்காமல் இருந்து வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக பார்க்கப்படுகிறது. அவர்கள் அனைத்து தரப்பையும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என கூறினாலும், நிலையான ஓர் முடிவை இன்னும் எடுக்காமல் இருக்கிறது.
ஓபிஎஸ் – இபிஎஸ் : மேலும், அதிமுக கட்சியானது தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என இரு பிரிவுகளாக இருக்கிறது. இதனால் யார் போட்டியிடுவார்கள் என்ற எண்ணமும் மக்கள் மனதில் இருக்கிறது. அதேபோல் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவும் என்னும் உறுதியான முடிவு எடுக்காமல் இருக்கிறது.
பாஜக ஆலோசனை : ஏற்கனவே பாஜக முக்கிய நிர்வாகிகளை பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியாக சென்று கலந்து ஆலோசித்து விட்டு வந்துள்ளனர். இதனால் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதும் இன்னும் தெளிவாக தெரியவில்லை. பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கூட அக்கட்சி சார்பாக பேசிய நாராயண் திருப்பதி கூறுகையில், இன்னும் ஓரிரு நாட்களில் பாஜகவின் நிலைப்பாடு பற்றி அறிவிப்போம் என கூறியுள்ளார்.
பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து அதிமுக முடிவெடுக்க உள்ளதா? அல்லது அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து பாஜகவின் முடிவு உள்ளதா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். இருந்தாலும் பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்பதால் அதற்குள் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.