பாஜகவிற்கு ரஜினி ஆதரவு அளித்தால் நிலைப்பாடு என்ன ? எல்.முருகன் விளக்கம்
தேசியம் மற்றும் ஆன்மிகம் மீது அதிகப் பற்று கொண்டவர் ரஜினிகாந்த் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி அன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனவரியில் கட்சித் துவக்கம் என்றும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் பதிவிட்டார்.ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவித்தார் ரஜினி.பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட பின் ,டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இறுதியாக கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். தேர்தல் அரசியலுக்கு வராமல் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வேன் என்று தெரிவித்தார்.ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ஒரு சில ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த நிலையில், தங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சியினர் பலர் தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக தங்களது கட்சிக்கு ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மதுரை விமான செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது கூறுகையில்,தேசியம் மற்றும் ஆன்மிகம் மீது அதிகப் பற்று கொண்டவர் ரஜினிகாந்த்.பாஜகவும் தேசியம் மற்றும் ஆன்மிகத்தை இரு கண்களாக கொண்ட கட்சி.ஆகவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் பாஜகவிற்கு ஆதரவு அளித்தால் வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார்.