மது என்ன கொரோனாவிற்கான மருந்தா – பிரேமலதா அரசுக்கு கேள்வி
மது என்ன கொரோனாவிற்கான மருந்தா ? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மே 3-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு மே -17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடாகா மற்றும் ஆந்திராவில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரு சில மாநிலங்களிலும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.ஆனால் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நெருக்கமாக இருந்தது பெரும் விவாதத்தை கிளப்பியது.
இதற்கு இடையில் தான் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.அதாவது, தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உள்ளதாக அறிவித்தது. தடைசெய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க அனுமதி அளித்தது.ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை என்றும் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று அறிவித்தது.மேலும் வயதுவாரியாக நேரம் ஒதுக்கீடு செய்தும் அறிவித்தது.இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தில் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் முடிவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,மது விற்பனைக்கு தடை இல்லை என்று அறிவித்தது.
இதற்கு இடையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்தியது.இந்நிலையில் தான் டாஸ்மாக் கடைகளை திறந்ததற்கு அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இப்போது திறப்பதற்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது .இஷ்டத்திற்கு மூடுவது, இஷ்டத்திற்கு திறப்பதும் குடும்ப வன்முறைக்கு வித்திட்டு பிரச்னைகளை உருவாக்கும் என்று தெரிவித்தார்.மேலும் மது என்ன கொரோனாவிற்கான மருந்தா என்றும் கேள்வி எழுப்பினார்.