திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
பாம்பன் புதிய பாலத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்த சில நிமிடங்களிலேயே செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே சுமார் ரூ.550 கோடி செலவில், 2.08 கி.மீ நீளத்துக்கு இந்த புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
பின்னர், சாலை பாலத்தில் இருந்து ஒரு ரயிலையும், கப்பலையும், புதிய பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு நடத்தினார். பாம்பன் பாலத்தை திறந்து வைத்தப் பின், சாலை மார்க்கமாக வந்த பிரதமருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் கோயிலுக்குச் சென்ற பிரதமர் ராமநாத சுவாமியை தரிசித்து மனமுருகி வழிபட்டார். இந்த நிலையில், தாறுமாறாக நிற்கும் பாம்பன் புதிய பாலம், பிரதமர் திறந்து வைத்த சில நிமிடங்களில் பழுதாகியதாக தகவல் வெளியானது. அதாவது, தூக்கு பாலத்தை கீழே இறக்க முடியாமல் ஒருபுறம் ஏற்றம், இறக்கமாக உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறால் ஒரு பக்கம் ஏற்றமாகவும், மறுபுறம் இறக்கமாகவும் உள்ளதால், பாலத்தை கீழே இறக்கமுடியாமல் தவித்தனர். இதையடுத்து, சரிசெய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், சில நிமிடங்களிலேயே பழுது சரிசெய்யப்பட்டு செங்குத்துப் பாலம் கீழே இறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பும் வழியில் ஹெலிகாப்டரில் இருந்தபடி ராமர் பாலத்தை தரிசித்ததாக பிரதமர் மோடி தனதுஎக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தெய்வாதீனமாக இதே நேரத்தில் தான் அயோத்தியில் உள்ள ராமரின் சிலை மீது சூரிய கதிர்கள் படும் அதிசயம் நிகழ்ந்ததாகவும், இந்த நேரத்தில் இந்த இரு தரிசனம் கிடைத்தது பாக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
आज रामनवमी के पावन अवसर पर श्रीलंका से वापस आते समय आकाश से रामसेतु के दिव्य दर्शन हुए। ईश्वरीय संयोग से मैं जिस समय रामसेतु के दर्शन कर रहा था, उसी समय मुझे अयोध्या में रामलला के सूर्य तिलक के दर्शन का भी सौभाग्य मिला। मेरी प्रार्थना है, हम सभी पर प्रभु श्रीराम की कृपा बनी रहे। pic.twitter.com/trG5fgfv5f
— Narendra Modi (@narendramodi) April 6, 2025