கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்.. தற்போதைய நிலை என்ன.?
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் அருந்தி அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. நாளுக்கு நாள் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணமே உள்ளது.
விஷச் சாராயம் அருந்திய 9 பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருவண்ணாமலை, திருச்சி, சேலம், விழுப்புரம் என பல மாவட்டங்களில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு 67 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்கள்.
உயரும் பலி எண்ணிக்கை
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதில் 5 பெண்களும் அடங்குவர். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிவாரணம்
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதே நேரம், பாஜக சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.
சிபிசிஐடி போலீசார் மனு
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மாதேஷே காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்றைய தினம் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மாதேஷ் உள்ளிட்ட 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கைது நடவடிக்கை
கள்ளச்சாராய வியாபாரி சின்னதுரைக்கு உதவியதாக அரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த விவகாரத்தில் அய்யாசாமி மற்றும் தெய்வரா ஆகிய இருவரை கைது செய்து தனிப்படை போலீசார், இதுவரை இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.