ஒருவார சிகிச்சை., நேற்று மூச்சுத்திணறல்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தற்போதைய நிலை என்ன?
ஒருவாரமாக மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது – செல்வப்பெருந்தகை பேட்டி.
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வரும் இவரது உடநலத்தில் நேற்று சற்று பின்னடைவு என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலம் குறித்து இன்று நேரில் சென்று பார்த்து மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மருத்துவர்கள் அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.” என்று தெரிவித்தார்.
மேலும், ” வருகின்ற 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது. அப்போது அவரது குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என நாங்கள் அவளோடு காத்திருக்கிறோம். அவர் குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்புவார். மருத்துவர்கள் அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த ஒருவாரமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று, சற்று பின்னடைவு ஏற்பட்டது. சிறிது மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனால் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் நல்ல முறையில் மீண்டு வருவார்.” என செல்வப்பெருந்தகை கூறினார்.
முன்னதாக, ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.