மருத்துவமனையில் ரஜினி.. தற்போதைய நிலை என்ன? மா.சுப்பிரமணியன் கொடுத்த தகவல்!
நடிகர் ரஜினிகாந்த் சாதாரண பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை : திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
ரஜினி இப்பொது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால், அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மருத்துவர்கள் அறிவுறுத்தல் பேரிலேயே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனை தரப்பில் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
மா.சுப்பிரமணியன் தகவல்
நடிகர் ரஜினிகாந்த் சாதாரண பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனியார் ஊடக ஒன்றிக்கு தகவல் அளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார். அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை, திட்டமிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை” எனவும் கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சை?
இன்று அவருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை, இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் பரிசோதனை, இசிஜி எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, ரஜினிகாந்திற்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செய்யக்கூடிய, ஆஞ்சியோகிராமை விட அதிநவீன அறுவை சிகிச்சை என்று கூறப்படுகிறது.
தீவிர, உடல் பரிசோதனைக்கு பின்னரே நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.