“எனக்கு இதெல்லாம் பிடித்தது” காங்கிரஸில் இருந்து விஜய்க்கு ஆதரவு குரல்.!
தவெக கொள்கையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இடம்பெற்றிருந்த நிலையில், மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை : விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற தவெகவின் முதல் அரசியல் மாநாடு சில குறைபாடுகள் இருந்த போதிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய்யின் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன்படி, அவரின் பேச்சு எளிமையாகவும், இளைஞர்களுக்கு புரியும் மொழியிலும் இருந்தது. அந்த வகையில், அவரது பேச்சு எளிமையாக இருப்பதாக பலரும் சோஷியல் மீடியாவில் குறிப்பிடுகின்றனர்.
அதே நேரம், விஜய்யின் பேச்சு மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் பல மாற்றங்கள் நிகழலாம். குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக என இருந்த இருமுனை அரசியலுக்கு வேட்டு வைப்பதாக அமைந்துள்ளது.
ஆம், 2026 இருமுனை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி, இபிஎஸ் தலைமையில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, விஜய் தலைமையில் தவெக கூட்டணி, சீமானின் நாதக என்று ஐந்து முனை போட்டி உருவாகி இருப்பதாக சில அரசியல் விமர்சகர்கள் கருத்துக்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், விஜய்யின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது X தள பக்கத்தில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” என கூறியுள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது.😊
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) October 28, 2024
‘பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணிக் கட்சிக்கும் ஆட்சியில் பங்கு வழங்கப்படும்’ என விஜய் கூறியிருந்தார். ஏற்கெனவே, ஆட்சியில் பங்கு வேண்டும் என வலியுறுத்தி வரும் காங்கிரஸ், விசிக கட்சிகள் விஜய் பேச்சுக்கு ஆதரவு தெறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.