உள்த்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது அப்பட்டமான பொய்-கே.எஸ்.அழகிரி
மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வழங்கவில்லை என கே.எஸ்.அழகிரி பேட்டி.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உள்த்துறை அமைச்சர் அமித்ஷா அப்பட்டமான பொய்களை பேசி வருகிறார். முன்னாள் பாரத பிரதமர் பேரறிஞர் திரு மன்மோகன் சிங் அவர்களை போன்ற நேர்மையான, நியாயமான ஒரு பிரதமராக மோடியால் ஒருகாலத்திலும் இருக்க முடியாது. 2ஜி குற்றச்சாட்டு வழக்கில் நீதிபதி ஷைனி அவர்கள் இந்த வழக்கில் எந்த விஷயமும் கிடையாததால் தள்ளுபடி செய்தார்கள். ஒரு தேவையற்ற விளம்பத்திற்காகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் தான் அது இருந்தது.
மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வழங்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட சென்னை- பெங்களூரு அதிவிரைவு திட்டம் கூட இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. உத்திரப் பிரதேசத்தில் 10 எக்ஸ்பிரஸ் சாலைகள் அறிவித்துள்ளது மோடி அரசு. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு எக்ஸ்பிரஸ் சாலை கூட கிடையாது. ஏற்கனவே தமிழ்நாட்டிற்காக அறிவிக்கப்பட்ட ரயில் திட்டங்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு 7 ஆண்டு காலம் ஆகிறது. இன்னும் கட்டிடம் கூட கட்டப்படவில்லை. ஒரு துரும்பு அளவிற்கு கூட தமிழகத்திற்காக மத்திய பாஜக அரசு எந்த நன்மையையும் செய்யவில்லை. ஆனால் இன்று உண்மைக்கு புறம்பாக, பொய்யான செய்திகளை உள்த்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார். இது மிகவும் தவறான செயல்.
பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மூப்பனார் அவர்கள் பிரதமராக வருவதை திராவிட முன்னேற்றக் கழகம் தடுத்தது என்று உள்த்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது அப்பட்டமான பொய். தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெறும் என உள்த்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் அதற்கு இடமில்லை. முதலில் தமிழ்நாட்டு மக்களுக்காக ஏதாவது செய்துவிட்டு வாக்கு கேளுங்கள்.
தலைவர் ராகுல் காந்தி அளவுக்கு பெருமையாக, நிதானமாக, பொறுமையாக, கருத்துக்களோடு பேசக்கூடிய வேற்றொரு தலைவர் இல்லை. திரு ராகுல் காந்தி அவர்கள் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறும்போது மோடியின் செயல்பாடுகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கிறாரே தவிர, ஒருபோதும் இந்தியாவை விமர்சித்து பேசியதே இல்லை.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் முன்னணி வீரராக தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார். தமிழ்நாடு ஒரு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. திரு ஸ்டாலின் அவர்கள் பாஜகவை கடுமையாக எதிர்ப்பதனால், அவரை தமிழ் மண்ணில் இருந்து, முதலமைச்சர் பொறுப்பில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக உள்த்துறை அமைச்சர் அமித்ஷா உண்மைக்கு புறம்பாக, பொய்யான செய்திகளை சொல்கிறார் என தெரிவித்துள்ளார்.