அரசு மருத்துவமனையில் இப்படியா? கஞ்சா கருப்பு குற்றசாட்டு.. நடந்தது என்ன? விளக்கிய மாநகராட்சி!
போரூர் மாநகராட்சி மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் நடிகர் கஞ்சா கருப்பு பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளார்.

சென்னை : போரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது மருத்துவர்கள் இல்லாததால், நடிகர் கஞ்சா கருப்பு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து, இது சென்னை மாநகராட்சியின் கீழ், இயங்கும் மருத்துவமனை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை மேயர் மகேஷ்குமார் உறுதியளித்துள்ளார்.
போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பொது மக்களோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் கஞ்சா கருப்பு, காலை 7 மணியில் இருந்து 10 மணி வரை காத்திருந்ததாகவும் மருத்துவர்கள் எவரும் இல்லை என்று கூறி, மக்களை காக்க வைத்துள்ளதாகவும் புகார் எழுப்பினார்.
மேலும், 200 பேர் வரை மருத்துவமனையில் இருந்தும், நோயாளிகளைக் கவனிக்க மருத்துவர்கள் இல்லை. பணியில் இருக்க வேண்டிய டாக்டர் யார்? எங்கே? என கேள்வி கேட்டும் உரிய பதில் இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு,”உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து வரப்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் எங்கே போனார் மருத்துவர்?” என்று சரமாரி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தப்புத்தப்பா நடக்குது, டாக்டரு பேருகூட சொல்ல மாட்றாங்க ஏசியை போட்டுவிட்டு, காலையில இருந்து டாக்டரு உள்ள இருக்குற மாதிரி பில்டப் மட்டும் கொடுக்குறாங்க” என்று நடிகர் கஞ்சா கருப்பு ஆவேசமாக கேள்வி எழுப்பி மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், சென்னை போரூர் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் நடத்திய சூழலில், 3 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நேரத்தில், ஒரு மருத்துவர் காலதாமதமாக வந்ததாதாகவும், 3வது மருத்துவர் வந்த பின் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.