ராகுல்காந்திக்கு வந்தது நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் – ப.சிதம்பரம்
இந்திய வரலாற்றில் அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை என்பது இதுவரை விதிக்கப்படவில்லை என ப.சிதம்பரம் பேட்டி.
சிவகங்கையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. 2019-ல் இருந்து கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்கு தற்போது அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரிக்கவேண்டாம் என மனுதாரரே மனுத்தாக்கல் செய்தும் குஜராத் நீதிமன்றம் விசாரித்துள்ளது. ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசியதற்காக குஜராத் மாநிலம் சூரத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. கோலாருக்கும் சூரத்துக்கும் என்ன தொடர்பு? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய வரலாற்றில் அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை என்பது இதுவரை விதிக்கப்படவில்லை. ராகுல்காந்திக்கு வந்தது நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பாஜகவை அகற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என தெரிவித்துள்ளார்.