ஆண்டாள் கோயிலில் இளையராஜாவுக்கு அனுமதி மறுத்தது ஏன்? அறநிலையத்துறை விளக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் குறிப்பிட்டவர்கள் மட்டுமே உள்ளே செல்ல செய்ய முடியும் என்பதால் இளையராஜா அனுமதிக்கப்படவில்லை என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை : நேற்று (டிசம்பர் 15) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அவரை அர்த்த மண்டபத்திற்குள் உள்ளே அனுமதிக்கவில்லை என்றும், அவர் அர்த்த மண்டபத்தின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அறநிலையத்துறையின் (மதுரை) இணை ஆணையர் செல்லத்துரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக புகழ்பெற்ற நாச்சியார் (ஆண்டாள்) கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்கு டிசம்பர் 15 அன்று ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயருடன், இசையமைப்பாளர் இளையராஜா வந்திருந்தார். இந்த கோயிலில், ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், மூலவர் கருவறைகளிலும், அர்த்த மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், உற்சவரும் எழுந்தருளி உள்ளனர். இங்குள்ள அர்த்த மண்டபத்தில் அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், மடாதிபதிகள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்ற மரபு உள்ளது.
ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயருடன், இசையமைப்பாளர் இளையராஜா அர்த்த மண்டபம் செல்லும் போது அங்குள்ள மற்ற ஜீயர் இந்த மரபை பற்றி கூறினர். இதனை இளையராஜா ஏற்றுக்கொண்ட பிறகு, இளையராஜா அர்த்த மண்டப வாசலில் இருந்து சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் மட்டும் அர்த்த மண்டபம் வரை சென்று சாமி தரிசனம் செய்தார் என அறநிலையத்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.