பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!
பஹல்காம் தாக்குதலின்போது காஷ்மீரில் சுற்றுலாவில் இருந்த தமிழர்கள், சென்னை திரும்பிய பின் தெரிவித்த பரபரப்பு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று தமிழக சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பயணிகளை பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வர திட்டமிட்டனர்.
அதன்படி, தமிழக அரசின் உதவியோடு, ஜம்மு காஷ்மீரில் இருந்து விமானம் மூலம், 68 சுற்றுலா பயணிகள் இன்று சென்னை வந்தடைந்தனர். சுற்றுலாப் பயணிகள் சென்னை வந்தடைந்தவுடன், அவர்கள் உயிர் தப்பியது குறித்து நிம்மதியும், தமிழக அரசின் விரைவான நடவடிக்கைகளுக்கு நன்றியும் தெரிவித்தனர்.
2 நொடில அந்த அட்டாக்ல இருந்து நாங்க தப்பிச்சோம் என பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற தமிழர்கள், சென்னை திரும்பியபின் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள், ”மத்திய, தமிழ்நாடு அரசு, ராணுவத்துக்கு நன்றி கூறினர்.
பின்னர் பேசிய அவர்கள், ”அய்யய்யோ.. காஷ்மீர்னா இப்படிதான் இருக்குமா? அங்க இருக்குறவங்க எப்படிதான் வாழ்கிறார்களோ என்ற பயம் வந்துச்சு. நம்ம தமிழ்நாட்டுல இந்த பிரச்னை இல்ல. அமைதியா சந்தோசமா நிம்மதியா இருக்கோம்.
தாக்குதலை தொடர்ந்து, காஷ்மீரில் உள்ளூர் ஓட்டுநர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு பெரிய உதவிகளைச் செய்ததாக குறிப்பிட்டனர். காஷ்மீர் மக்கள் எல்லாருமே தீவிரவாதி போல் சித்தரிக்கிறார்கள். ராணுவ ரன்வேயில் எங்களை அனுமதித்து பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும் அவர்கள் கண்ணீருடன் கூறினர்.