தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக வருகின்ற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கின் போது பின்வரும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
- மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.
- வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை (e-Registration) தொடர்ந்து செயல்படுத்தப்படும். (https://eregister.tnega.org). இரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பணிகள் சென்று வர பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும்.
- 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள் (Big format Shops), வணிக வளாகங்கள் (Shopping Complex & Malls) இயங்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
- வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
- உணவகங்கள் மற்றும் தேநீர்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.
- விடுதிகளில் (Hotels and Lodges) தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
- உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
• ஏற்கனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
- மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள்(Beauty Parlour, Hair cutting Saloons, Spas) இயங்க தடை விதிக்கப்படுகிறது.
- அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கைக் கூடங்கள் (Recreation Clubs), அனைத்து மதுக்கூடங்கள் (All Bars), பெரிய அரங்குகள் (Auditoriums), பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment / Amusement Parks) கூட்ட அரங்குகள் (Meeting Halls) போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.
- கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை தொடர்கிறது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடையும் தொடர்கிறது.
- அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் (IT, ITEs) இயங்க தடை விதிக்கப்படுகிறது.
- விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
- அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.
- நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
- பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
- பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் (summer camps) ஆகியவை இயங்க அனுமதி இல்லை.
- நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் (sports training academies) செயல்பட அனுமதி இல்லை.
- மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.
-
முழு ஊரடங்கின் போது உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிக (e commerce) நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை.