துணை முதலமைச்சரின் ‘முக்கிய’ அதிகாரங்கள்.., உச்சநீதிமன்றம் கூறுவதென்ன.?
துணை முதலமைச்சர் பதவி என்பது மாநில அரசால் நியமனம் செய்யப்படும் பதவி மட்டுமே. ஒரு அமைச்சருக்கு இருக்கும் அதிகாரம் மட்டுமே அவர்களுக்கு இருக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.
சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த ‘துணை முதலமைச்சர்’ பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில் கிடைத்தது. தமிழகத்தில் 3வது துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஏற்கனவே, கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பில் இருக்கும் போது அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு முதன் முறையாக கொடுக்கப்பட்டது.
3வது முறையாக துணை முதல்வர் :
அடுத்ததாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு , 2017இல் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தனர். அதற்கு பிறகு தமிழக அரசியல் வட்டாரத்தில் 3வது முறையாக உதயநிதி துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டரீதியாக துணை முதலமைச்சர் என்ற பொறுப்பு அதிகாரபூர்வமாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், நாட்டில் 14 மாநிலங்களில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட 7 மாநிலங்களில் 2 துணை முதலமைச்சர்கள் பொறுப்பில் உள்ளனர்.
பொதுநல வழக்குகள் :
துணை முதலமைச்சர் பொறுப்புகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது . கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்த, உட்கட்சியினரை திருப்பதிபடுத்த, சாதி , மத ரீதியில் பதவிகளை சமன் செய்து கொடுக்க என்று பல்வேறு அரசியல் காரணங்களால் இப்படியான பதவிகள் சட்டத்திற்கு எதிராக வழங்கப்படுகின்றன என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் முன்னதாக வெளியாகியுள்ளன.
துணை பிரதமர் – துணை முதல்வர் :
கடந்த பிப்ரவரியில் தலைமை நீதிபதி சந்திரசூட் அளித்த தீர்ப்பில், ‘துணை பிரதமர்’ வழக்கு குறித்தும், அதற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்தும் மேற்கோள்கட்டப்பட்டினார். அதாவது, சர்தார் வல்லபாய் பட்டேல், மொரார்ஜி தேசாய் ஆகியோருக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் , துணை பிரதமர் பதவி என்பது ஒரு அமைச்சர் பதவி போன்றது தான். அமைச்சருக்கு கொடுக்கப்படும் அதிகாரம் , சம்பளம் தான் அவர்களுக்கும் கொடுக்கப்டும் என கூறப்பட்டு இருந்தது.
அந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி கடந்த பிப்ரவரியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பளித்திருந்தார். அதில், “துணை முதலமைச்சர் பொறுப்பு என்பது ஓர் அமைச்சர் பொறுப்பு மட்டுமே. அமைச்சருக்கு அளிக்கப்படும் அதிகாரம் மட்டுமே இவருக்கும் அளிக்கப்படும். இவர் மற்ற அமைச்சர்களை காட்டிலும் முன்னிலையில் இருப்பார். முதலமைச்சர் உத்தரவின் பெயரில் இவர் செயல்படுவார். முதலமைச்சர் தனது அதிகாரங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.” எனக் குறிப்பிட்டு துணை முதலமைச்சர் பதவிக்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
துணை முதலமைச்சரின் அதிகாரம் :
தமிழ்நாட்டில் துணை முதலாச்சராக பொறுப்பேற்ற உதயநிதியின் அதிகாரம் என்னவென்றால், ஏற்கனவே சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உதயநிதி வசம் உள்ளது. இதன் மூலம் எந்த துறையில் முதலமைச்சர் அறிவிப்பில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், அதில் உதயநிதியின் பங்கு என்பது இருக்கும்.
துணை முதல்வர் பொறுப்பு மாநில அரசால் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு என்றாலும், மாநில அரசாங்கத்தில் முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இருக்கும் பெரிய பதவி (முதன்மை அமைச்சர்) ஆகும்.முதலைச்சர் வெளிநாடு சென்றாலோ, மருத்துவ ரீதியிலான ஓய்வு சமயத்திலேயோ முதலமைச்சர் கவனித்து வரும் துறைகளை துணை முதலமைச்சர் கவனிப்பார்.
முதலமைச்சர் இல்லாத சமயத்தில் முதல்வர் உத்தரவின் பெயரில் அமைச்சரவை கூட்டத்தை தலைமை தாங்கி துணை முதல்வரால் நடத்த முடியும். துணை முதல்வர் என்ற முறையில் அமைச்சர்களுக்கு உத்தரவுகளை உதயநிதியால் பிறப்பிக்க முடியும். துணை முதல்வர் பிறப்பிக்கும் உத்தரவுகளை முதலமைச்சரால் மாற்ற முடியும் என்றாலும், அதற்கு மிகமிக குறைவான வாய்ப்புகள் உள்ளது என்பதால் உதயநிதி உத்தரவுகளை மற்ற அமைச்சர்கள் பின்பற்ற வேண்டிய சூழல் தான் ஏற்படும் என்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.