தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்தது என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!
நிதிப் பங்கீட்டில் எந்த அரசியல் நோக்கமுமில்லை என்றும் தமிழ்நாட்டிடமிருந்து பெற்ற வரியை விடவும், அதிகமாக நிதி வழங்கி உள்ளோம் எனவும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மல் சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பதில் அளித்திருந்தார். அமைச்சர் கூறியாதவது, தமிழ்நாட்டில் இருந்து நேரடி வரி வருவாயாக ரூ.6.23 லட்சம் கோடி அளவிற்கு மத்திய அரசு வசூலித்துள்ளது.
மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு ரூ.4.75 லட்சம் கோடி மட்டுமே கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு நிதி பகிர்வாக வழங்கும் ஒரு ரூபாயில் 29 பைசாவை மட்டும் தான் மத்திய அரசு திரும்ப அளிக்கிறது. மற்ற மாநிலங்களை போல் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்குகிறது.
தமிழகத்திற்கு வரி பகிர்வு குறைவு..1 ரூபாய் கொடுத்தால் 29 காசுகள் மட்டுமே – அமைச்சர் தங்கம் தென்னரசு
கடுமையான நிதி நெருக்கடியை தமிழக அரசு சிறப்பாக கையாள்கிறது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தத்தை அளிக்கிறது என கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்தது என்ன? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்த வீடியோவை மேற்கோள்கட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிட மாடல் அரசு. மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.
மேலும், இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? என கேள்வி எழுப்பி மத்திய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு என தெரிவித்துள்ளார்.