நாங்க என்ன கருவேப்பிலையா, கொத்தமல்லியா? விட மாட்டோம் – ராதிகா சரத்குமார் பேச்சு
எனக்குக் கடவுள் சரத்குமார்தான் அவர் கட்டளையிட்டால் நிச்சயம் இந்த தேர்தலில் போட்டியிடுவேன் என ராதிகா சரத்குமார் உறுதி அளித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் சரத் குமாரை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக மீண்டும் போட்டியின்றி சரத் குமார் தேர்வானார்.
இதனைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், கட்சி தலைவர் சரத்குமாருக்கு பயம் கிடையாது. ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் தான் கட்டுபடுவார். அன்பு ஒன்றுக்குத்தான் சரத்குமார் தலைவணங்குவார் என கூறியுள்ளார். அந்த அன்பு இருந்த எது வேண்டுமானாலும் சாதிக்கலாம், அது இந்த சமத்துவ சொந்தங்கள், நீங்கள் காட்டுகின்ற அன்பை வைத்து சாதிப்போம் என்ற நம்பிக்கையோடு சரத்குமார் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
முக்கிய முடிவுகளை கட்சியின் தலைவர் சரத்குமார் விரைவில் அறிவிப்பார். அதனை மனதில் வைத்துக்கொண்டு இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் தேர்தலாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். நாங்க என்ன கருவேப்பிலையா, கொத்தமல்லியா? விட மாட்டோம், பயம் எங்களுக்கு கிடையாது, அன்பு ஒன்று மட்டும் தான் எங்களிடம் உள்ளது என அதிமுகவை குறி வைத்து பேசியுள்ளார்.
தலைவர் கட்டளையிட்டால் நான் கண்டிப்பாக இந்த தேர்தலில் போட்டியிடுவேன் என்று உறுதியாக கூற கடமைப்பட்டிருக்கிறேன். நிறைய பேர் நான் கோவில்பட்டி அல்லது வேளச்சேரியில் நிற்க வேண்டும் என கூறியிருக்கிறார்கள். ஆனால், கடவுள் என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரியாது. கடவுள் என்று சொல்லுவது சரத்குமார் எனக்கும் கடவுள் தானே என்று கூறியுள்ளார். அவருக்காக கண்டிப்பாக இந்த தேர்தலில் நிற்பேன் என்றும் எங்களது இலக்கு வெற்றி என்றும் உறுதி அளித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொது செயலாளர் விவேகானந்தா, ராதிகா சரத்குமார் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனிடையேகடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகியது. இதையடுத்துமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து, சரத்குமார் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.