தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட திமுக அரசு குறித்த தீர்மானங்கள் என்னென்ன?
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும் கள்ள சாரய விற்பனை உள்ளிட்டவை சுட்டிக்காட்டி திமுக அரசிற்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், திமுக மற்றும் பாஜகவை நேரடியாக விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநில தன்னாட்சி உரிமை , நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு முறை, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, மதுக்கடை மூடல், மின்சாரம், பால் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதியை நிலை நாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமூக நீதி பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருகிறது. மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பித்துக்கொள்ள நினைக்கிறது.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். பரந்தூரில் உள்ள 13 நீர்நிலைகளை அழிப்பது சென்னையை நிரந்தர வெள்ளக்காடாக்கும்.
மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என பொதுமக்கள் மீது மேலும் மேலும் வரிச் சுமையை மட்டும் அதிகமாக விதிக்கிறது திமுக அரசு.
கள்ளச் சாராய விற்பனை, போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரிப்பு போன்ற நிர்வாகச் சீர்கேடுகளைச் சரிசெய்யாததால் அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையே காட்டுகிறது.
மகளிர் உரிமைத் தொகை, பரிசு தொகை என்று ஒரு புறம் அறிவித்துவிட்டு மறுபுறம் மதுக்கடைகள் மூலம் வருவாய் பெருக்கி வருவது ஏற்புடையதல்ல, மதுக்கடைகளை கால நிர்ணயம் செய்து மூட வேண்டும்.
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் விருது வழங்கும் தமிழ்நாடு அரசை வரவேற்றும் தவெக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.