இவர்களுக்கு மாதம் ரூ.2,000… பெண்களுக்கான முக்கிய திட்டங்கள் என்னென்ன?
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புது திட்டம் 'Face Recognition, Video Analysis' தொழில்நுட்பங்களை கொண்ட இந்த திட்டத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சென்னை : 2025 – 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு. அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டங்கள் பெண்களின் பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு, கல்வி, மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புது திட்டம் ‘Face Recognition, Video Analysis’ தொழில்நுட்பங்களை கொண்ட இந்த திட்டத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறிப்பாக, பெற்றோரை இழந்த சுமார் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
பெண்களுக்கான முக்கிய திட்டங்கள்:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் :
தற்போது 1.15 கோடி பெண்கள் மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை பெறுகின்றனர். இதற்காக 2025-26 ஆம் ஆண்டுக்கு 13,807 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை பயன்பெறாத தகுதியுள்ள பெண்களும் புதிதாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழு:
வரும் ஆண்டில் தமிழகத்தில் 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன் வழங்கப்படும்.
விடியல் பயணத் திட்டம் :
பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்திற்கு 3,600 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் பேருந்து பயணம் 40% இலிருந்து 65% ஆக உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு பெண் மாதம் 888 ரூபாய் சேமிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோழி & மாணவிகள் விடுதிகள் :
ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும். சென்னை கோவை மதுரையில் தலா 1000 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவிகள் விடுதிகள் ரூ.275 கோடியில் கட்டித்தரப்படும் .
பெண்கள் பாதுகாப்பு திட்டம்:
நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முக அடையாளம் காணல் (Face Recognition) மற்றும் தானியங்கி பதிவு எண் அடையாள (Automatic Number Plate Recognition) அமைப்புகளுடன் கூடிய உயர்தொழில்நுட்ப திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை, திருச்சி, மதுரை, தாம்பரம், ஆவடியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய CCTV கேமராக்கள் பொருத்தப்படும்.
சொத்து பதிவில் சலுகை:
ஏப்ரல் 1, 2025 முதல், பெண்கள் பெயரில் சொத்து (வீடு, நிலம், விவசாய நிலம்) பதிவு செய்யும் போது 1% பதிவுக் கட்டணம் குறைக்கப்படும். இது 10 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள சொத்துகளுக்கு பொருந்தும். பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால், 1% கட்டண சலுகை வழங்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தொழில் முனைவோர் திட்டம்:
ரூ.225 கோடியில், ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 150 வகையான அரசு சேவைகளை இணைய வழியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு உதவி:
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு (பெரும்பாலும் பெண் குழந்தைகள் உட்பட) 18 வயது வரை மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு 50,000 குழந்தைகள் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.