கனமழை எச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

TN Rains - MK Stalin

சென்னை : வடகிழக்கு பருவமழை இந்த முறை மிகத் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், கனமழை எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பங்கேற்னர். இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், “ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியுங்கள். ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப் பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் இன்றே மீட்புப் படகுகளை நிறுத்துங்கள். போக்குவரத்து பாதிக்கப்படும்போது மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நாளை (15.10.2024) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். நாளை (15.10.2024) முதல் (18.10.2024) வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

வடகிழக்கு பருவமழையை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம். சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம். அரசு வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்,அரசு அலுவலர்கள் அளிக்கும் முன்னெச்சரிக்கைப்படி நடந்து கொள்ளுங்கள்.

தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ இரயில் மற்றும் பறக்கும் இரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

உணவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்த வேண்டும். நிவாரண முகாம்களை பாதிப்பிற்குள்ளாகக்கூடிய தயார் நிலையில் பகுதிகளில் இருந்து வைப்பதோடு, முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்” என விரிவாக அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்