மதிமுகவில் தலைமைச்செயலாளர் துரை வைகோவுக்கு என்னென்ன பணிகள்? – வைகோ அறிவிப்பு!
தமிழகம்:மதிமுக கட்சியின் தலைமைச்செயலாளர் துரை வைகோ அவர்கள், மேற்கொள்ள வேண்டிய பணிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில்,கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள்,அரசியல் ஆலோசனைக் குழு,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அப்போது,கட்சியின் நிர்வாகிகளிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதில்,துரை வைகோவுக்கு பெரும்பான்மையான வாக்கு கிடைத்தது.இதனால்,மதிமுக தலைமை கழக செயலாளராக தனது மகன் துரை வைகோவை நியமித்து பொதுச் செயலாளர் வைகோ உத்தரவிட்டார்.
இந்நிலையில்,மதிமுக கட்சியின் தலைமைச் செயலாளர் துரை வைகோ அவர்கள்,மேற்கொள்ள வேண்டிய பணிகளை பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.அதன்படி,
- மதிமுக சட்ட திட்ட விதி எண்: 23 இன் படி மதிமுக பொதுச்செயலாளர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
- மதிமுக சட்ட திட்ட விதி எண்: 26 இன் படி, தலைமைக்கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும்,கட்சியின் எல்லா அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் தலைமை நிலையம் இயங்கி வருகின்றது.
- மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இயங்கும் தலைமை நிலையப் பணிகளை, தலைமைக் கழக செயலாளர் ஒருங்கிணைப்பார்.
- கட்சிப்பொதுச்செயலாளரின் சுற்றுப்பயணங்கள், சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையையும் தலைமைக்கழகச் செயலாளர் மேற்கொள்வார்.
- கட்சியின் நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்;
- அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட மற்ற பல்வேறு அமைப்புகளுடன் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் தொடர்புகளில் பொதுச்செயலாளர் இடும் பணிகளை நிறைவேற்றுதல் தலைமைக் கழகச் செயலாளரின் பணி ஆகும்.
- மேலும்,மதிமுக சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் (MDMK IT- WING) பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளரே கவனிப்பார்”,என்று தெரிவித்துள்ளார்.