தமிழ்நாடு முழுவதும் வசிக்கும் பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள்..! மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு..!
தமிழ்நாடு முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் நரிக்குறவர்களும் பழங்குடியினரும் வசிக்கும் பகுதிகளில் 4.11.2021 அன்று நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஆணைகளை வழங்கியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்,
2. சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களின் தேவையை கண்டறிந்து எவரும் விடுபடாது அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது போல் தமிழ்நாட்டில் நரிக்குறவர், பழங்குடியினர். இதர விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் இது போன்ற நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இரண்டு வாரக் காலத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
3. எனவே, பழங்குடியின மக்களும், விளிம்பு நிலையில் உள்ளவர்களும் வசிக்கும் பகுதிகளை மேம்படுத்திடவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையிலும், தகுதியுடைய அனைத்து நலத்திட்டங்களும், உரிமைகளும் அவர்களுக்கு வழங்கிடும் பொருட்டு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
* நரிக்குறவர், பழங்குடியினர், இதர விளிம்பு நிலை மக்கள் வசிக்கும்ஒவ்வொரு கிராமம்/பகுதிகளை நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதிகளுக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்புகளையும், சம்பந்தப்பட்ட துறைகள்/திட்டங்கள் வாரியாக அளிக்கக்கூடிய பயன்களையும் கண்டறிந்து பட்டியலிடுதல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான, அரசின் சார்பாக மேற்கொள்ளக் கூடிய அனைத்து உதவிகளையும் முழுமையாகக் கண்டறிதல்: உதாரணமாக குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ். ஓய்வூதியம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், போன்றவை,
இத்துடன், தேவைகள் மதிப்பீடு படிவம் (Needs Assessment Format) இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிநபர் தேவை மற்றும் கிராமம்/பகுதிகளுக்கான பெ பொதுவான உட்கட்டமைப்பு தேவைகளை விடுதலின்றி ஆய்வு மேற்கொண்டு முழுமையான(exhaustive) தேவைகள் மதிப்பீடு பட்டியல் (Needs Assessment List) தயார் செய்யப்பட வேண்டும். இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டவற்றைத் தவிர இதர தேவைகள் இருப்பின் அவற்றையும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். இப்பணியினை மேற்கொள்ள ஒரு தொடர்பு அலுவலரை (Nodal Officer) நியமனம் செய்யப்பட வேண்டும்.
4. மேற்குறிப்பிட்ட தேவைகள் மதிப்பீடு பட்டியல் தயாரிக்கும் பணியினை 25.11.2021-க்குள் நிறைவுற்று, இந்த சிறப்பு முன்னெடுப்பினை கண்காணித்து வரும் தலைமைச் செயலகத்தின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு மின்னஞ்சல் (pidept@gmail.com) மூலம் அனுப்பிட வேண்டும். மேலும், தேவைகள் மதிப்பீடு பட்டியலில் உள்ளவற்றை சம்பந்தப்பட்ட துறைகள் திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு பெற்று உடனடியாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.
5.இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்ற அறிக்கையினை வாரந்தோறும் வெள்ளிக் கிழமை அன்று 1200 மணிக்குள் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு அனுப்பிட வேண்டும். தேவைகள் மதிப்பீடு பட்டியலில் உள்ள அனைத்துப் பணிகளும் இரு மாதங்களுக்குள் (3112.2021 க்குள்) முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இப்பணி முழுவதுமாக முடிக்கப்படும் வரை மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முன்னேற்ற அறிக்கைகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடி பார்வைக்கு உங்களுக்கு குறிப்பிட்டுச் சொல்ல கொண்டு செல்லப்படும் என்பதையும் விரும்புகிறேன்.
6. ஆகவே, இப்பணியை முதன்மையாகக் கருதி, முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு தங்கள் மாவட்டத்தில் நரிக்குறவர். பழங்குடியினர் போன்ற விளிம்பு நிலையில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்கள் வசிக்கும் பகுதிகளையும் முழுமையான அளவில் மேம்படுத்திட தேவையான அனைத்து முன்முயற்சிகளையும் தங்களின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.