வார இறுதி நாட்கள், சுதந்திர தினம்! 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பொது விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வெளிய ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லுபவர்களுக்கு ஏதுவாகவும் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது போக்குவரத்துறை. சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், வரும் 12ம் தேதி முதல் தொடர் முறை தினமாக வருகிறது. சனி, ஞாயிறு, மாத சிவராத்திரி மற்றும் சுதந்திர தினம் என தொடர் விடுமுறை நாட்களாக உள்ளது. இதனால், சொந்த ஊரை விட்டு சென்னை உள்ளிட்ட வெளி ஊர்களில் பணிபுரிபவர்கள், படிப்பவர்கள் என பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையங்களில் குவிந்து இருப்பார்கள். இந்த நிலையில், வார இறுதிநாட்கள், சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது அரசு.
வார இறுதி நாட்களான ஆக.12, 13 மற்றும் சுதந்திர தினமாக ஆக.15-ல் விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து ஆக.11ம் தேதி கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய முக்கிய இடங்களுக்கு ஆக12ல் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், பெங்களுருவில் இருந்து பிற இடங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.