களைகட்டிய பொங்கல் : அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்டோர் வருகை!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இந்த பொங்கல் வாரத்தில் 80,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Arignar Anna Zoological Park Pongal 2025

சென்னை :  பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இந்த பொங்கல் வாரத்தில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் என பலரும் வருகை தந்துள்ளனர்.  எ பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், பூங்கா நிர்வாகம், சம்பந்தப்பட்ட பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து, அனைத்து பார்வையாளர்களின் வசதியையும் உறுதிப்படுத்த விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

மொத்தமாக பொங்கல் விடுமுறையை முன்னிட்டு எத்தனை பேர் பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர் என்ற தகவலையும் பூங்கா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளது. இதுகுறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பொங்கல் வாரத்தில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் உட்பட 80.000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர்.

பார்வையாளர்கள் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் பெற ஊக்குவிக்கப்பட்டனர். மேலும், இலவச Wi-Fi வசதியும் வழங்கப்பட்டது. வாகன நிறுத்ததுமிடத்திலிருந்து பூங்காவிற்கு பார்வையாளர்கள் வர இலவச பேருந்து வசதி அமைத்து தரப்பட்டது. சுமார் 6000-க்கும் மேற்பட்ட 8 வயதுக்குட்பட்ட குழந்தை பார்வையாளர்களுக்கு பெற்றோரின் தொடர்பு எண்ணுடன் கை வளையம் வழங்கப்பட்டது.

கூடுதலாக 15 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், 24 உயிர் கழிப்பறைகள் மற்றும் ஆவின் பாலக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. நான்கு இடங்களில் அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் கொண்ட மருத்துவ குழு மற்றும் உதவி மையங்கள், அமைக்கப்பட்டது.150 காவல்துறை பணியாளர்கள் மற்றும் 50 NCC மாணவர்கள் கூட்டத்தை நிர்வகிப்பதற்கும் பார்வையாளர் உதவிக்காகவும் செயல்பட்டனர்.

பார்வையாளர்களின் நடமாட்டத்தை கட்டுப்பாட்டு அறையிலிருந்து CCTV அமைப்பு மூலம் கண்காணிக்கப்பட்டு கூட்டத்தை வழிநடத்த சரியான வழிமுறைகள் வழங்கப்பட்டன. 90 சீருடை அணிந்த வன ஊழியர்கள். 150 காவல்துறை பணியாளர்கள் மற்றும் 50 NCC மாணவர்கள் கூட்டத்தை நிர்வகிப்பதற்கும் பார்வையாளர் உதவிக்காகவும் செயல்பட்டனர்.

பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்த பூங்காவின் முக்கிய இடங்களில் தகவல் மற்றும் வழிசெலுத்தல் பலகைகள் நிறுவப்பட்டன. பூங்காவின் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல தனி வழியும், வெளியேறி பேருந்து நிறுத்தத்தை அடைய தனி வழியும் ஏற்பாடு செய்திருந்தது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் கொண்டாட்டமாக அமைய சிறப்பான முறையில் அனைத்து ஏற்பாடு செய்து பார்வையாளர்களின் மனதில் நீங்காத நினைவை உறுதி செய்தது” எனவும் நிர்வாகம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்