களைகட்டும் ஜல்லிக்கட்டு : அவனியாபுரத்தில் வெற்றிபெற்றால் என்ன பரிசு தெரியுமா?
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பாக கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தயாராகிவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஜல்லிக்கட்டு திடலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விடும் வாடிவாசல் பகுதி, காளைகளை அடக்கும் பகுதியில் தேங்காய் நார் கொட்டும் பணி விறுவிறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 2,035 காளைகளும், 1735 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஒரு மணிநேரத்திற்கு 100 காளைகள் வீதம் களத்தில் அவிழ்க்கப்பட உள்ளது.
காலை 5 மணி முதல் காளைகள், வாடியில் அவிழ்க்கப்படும். மாலை 4 மணி வரை காளைகள் அவிழ்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்க்க ஆன்லைன் வழியாக டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு வழங்கப்படும் கார் எவ்வளவு விலை என்பதற்கான தகவலும் வெளிவந்து இருக்கிறது.
அதன்படி, மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பாக ரூ.8.50 லட்சம் மதிப்பிலான கார் வழங்கப்பட உள்ளது. ஆனால் என்ன வகையான கார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகளாக நடந்த வெறித்தனமான போட்டியில், அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் 17 காளைகளை அடக்கி வெற்றிபெற்றார். அவருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.